வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Sunday, January 15, 2012

மதுப்புட்டிகள் கவிழ்ந்து கிடக்கின்றன!

      மதுக்குடிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சாராயம் குடிப்போம் சந்தோசமாய் இருப்போம்! என்றுதான் நாங்கள் மதுக்கோப்பைகளைத் தட்டுவோம். செந்திலுடன் சரக்கடித்தால் பெரியார் சொன்னத எவன் புரிஞ்சிக்கிறான்? என்ற வசனம் இல்லாமல் முடிவதில்லை. கனகு! நம்ம வாழ்க்கைய நாமதான் பார்த்துக்கனும்! என்ற வசனமின்றி முடித்ததில்லை சுரேஷ். எனக்கு ஊற்றி கொடுத்து விட்டு, நான் குடிப்பதை பெருமிதத்துடன் பார்க்கும் சித்தப்பா! முடிவில் குழந்தையாகி சண்டையிடுவதுண்டு அல்லது அழுவதுண்டு. முதல்முறை குடித்து விட்டு பேராசிரியர் பத்மநாபன் நான் போதையாவா இருக்கேன் கனகு! எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். இப்படி மது + நான்+ மற்றவர்கள் என்ற கூட்டணி என்றுமே வெற்றிக்கூட்டணியாகவே இருந்திருக்கிறது.

  
பொதுவாக மதுவிருந்தில் கொள்கைகளுக்கும், சினிமாவிற்கும் 50-50 சதவீதம் அனுமதியுண்டு. கொள்கை பேசும்போது யார் வார்த்தை வழியாவது பெரியார் தாடியை நீவிக்கொண்டு எப்படியும் நுழைந்து விடுவார். பெரியார் சொல்லித் தொலச்சத படிச்சுத் தொலச்சுட்டோம் என்ன பன்றது இப்படித்தான் கொள்கையோட வாழனும். பெரியார் தி.க சார்புல குடியரசு இதழ் தொகுப்பு போடறாங்க பதிவு செய்துட்டேன் மாப்ள! என்று தொடங்குவார் செந்தில். மக்கள்ட்ட போயி கேளு மார்க்ஸ்-னா ஏதோ ஒரு யூனியன் லீடர்னு சொல்லுவான். மார்க்ஸ் சர்வ உலகத்துக்குமான மேதைன்னு யாருக்கு தெரியுது. மார்க்ஸியம்கிறது ஒரு இயற்கைத் தத்துவம் அதை யாரும் தவிர்க்க முடியாது என்று செந்தில் பேசத்தொடங்கினால் நாளையே புரட்சி வெடித்து விடும்போல் இருக்கும். முதலாளிகள் தங்களுக்கான சவப்பெட்டிகளை  தானே செய்து கொண்டு, அதன் உள்ளே போய் படுத்து கொள்வார்கள் என்று மார்க்ஸ் அப்ப சொன்னது இப்ப சரியா இருக்குது. அமெரிக்காவிலயும், ஐரோப்பாவிலயும் என்ன நடக்குது? மார்க்ஸ் சொன்னமாதிரிதானே நடக்குது? என்று செந்தில் கேட்கிற கேள்விக்கும், சொல்கிற கருத்துக்கும் என்றுமே பதிலோ, மாற்றுக் கருத்தோ இருந்தது இல்லை.

  
 அப்படியே மார்க்ஸிடமிருந்து பேச்சு சினிமா பக்கம் திரும்பும்.  உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரைக்கும் போகும் பேச்சு. ஒரு ஷாட்ல மெரட்டிட்டான் கனகு என்று தொடங்குவார்  சுரேஷ்.  seven samurai பாதிப்பு மிஷ்கினோட எல்லா படங்கள்ளயும் இருக்கு என்பார் ஆனந்த். தன்னோட எல்லா படங்கள்ளேயும் அன்பை மட்டும்தான் போதிச்சார் அகிரா குரசேவா என்று என்பங்கிற்கு நான் கொளுத்திப் போடுவேன். அப்படியே யார் யாரோ வருவார்கள் vittoria de sica, ritwik ghatak, Andrzej Wajda, francois truffaut  இப்படி ஜாம்பவான்கள் எல்லாம் சர்வசாதாரணமாக வந்து போவார்கள். Andrzej Wajda மாதிரி தமிழ்ல ஒரு political story பண்ணனும். அதுமட்டுமில்ல செமத்தையான political satire ஒன்னும் பண்ணனும்.... அந்தப்படம் மூலமா அரசியல்வாதிங்களோட டவுசரக் கழட்டனும்னு  முடிவெடுப்போம்.

      மது அருந்தும்போது தமிழ் பேராசிரியர் பத்மநாபன் இருந்தால் கொஞ்சம் இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கப்படும். சங்கப்பாடல் தொடங்கி நவீன இலக்கியம் வரை அலசி ஆராயபப்டும். உச்சி வெயிலில் பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதை சொல்லமுடியாத ஊமையைப் போல் தான் இருப்பதாக தலைவி கூறும்  அகநானூற்றுப் பாடலை பத்மநாபன் பாடத் தொடங்கினால், நாங்களும் காதலில் உருகுவோம். புதுமைப்பித்தன் இருமிச்  செத்தது முதல் ஆத்மநாம் தற்கொலை வரை நீளும் இலக்கிய விவாதம். தத்துவங்கள் பக்கமும் போவதுண்டு. நீட்சே, கெஹல், எக்ஸ்டென்சியலிசம் என்று எங்கேயோ செல்லும். மனிதன் இது அல்லது அது என ஏதாவது ஒரு முடிவெடுக்கவேண்டிய துன்பமான நிலையிலே இருக்கிறான் என்று பத்மநாபன் சொல்லும்போது எல்லோரும் அவரவர் வாழ்க்கைக்குள் சென்று இருப்போம்.


   நண்பர் யாசர் உடன் சரக்கடிக்கும்போது வேறொரு உலகம் தெரியும். BBC, tim sebastin. noam chomsky, p.sainath, karan thapar என நீளும் மீடியா கனவுகள் இறுதியில் கருகி விழும். நாம இங்க இருக்க கூடாதடா! நாம மக்கள நேசிக்கக் கூடாதடா! நமக்கு இப்போ எங்கேயும் role இல்லடா! நீ மாட்டு டாக்டராவே போயிடுடா! என்ற வருத்தத்துடன் முடிப்பார். இப்படி மதுக்கோப்பையுடன் உலகை அலசும் இரவுகள் பல கடந்து போய்விட்டன. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வெடித்துச் சிதறாமல் மதுப்புட்டிகள் கவிழ்ந்து கிடக்கின்றன.

1 comment:

வேங்கடப்பிரகாஷ் said...

அருமை கனகு. நாம எப்பொ சேந்து தண்ணியடிக்கலாம்னு கேக்கத் தோணுது! தொடர்ந்து எழுதுங்க. படிக்கக் காத்திருக்கேன். குடிங்க படிங்க எழுதுங்க. எழுதுறதுக்கான உற்சாகம் எழுத எழுத வந்துரும். ஒத்தப் பத்தி எழுத மனசு வந்தா போதும். பக்கம்பக்கமா எழுத்து வரும். நெறய எழுதுங்க. குடி மறந்துபோகும். மறந்து போகணும். இப்ப குடிங்க அப்புறமா குடிக்காதீங்க. இப்ப நான்லாம் குடிக்காமலெயே உளறல........அங்!?
-வேங்கடப்பிரகாஷ்