வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Sunday, April 1, 2012

3- ஒரு மொக்க பிளேடு!


டைம்ஸ் ஆப் இந்தியாவில்  வந்த ஆகா ஓகோ விமர்சனத்தைப் படித்து காண்டாகிதான் இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்.  உலகம் முழுவதும் பிரபலமான கொலைவெறிப் பாடல், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கம், தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பு என பலத்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய படம். ஆனால் நாங்க அவ்வளவு ஒர்த் இல்லப்பா! என்று மேற்கண்ட அனைவரும் கோரசாக சொல்லியிருக்கின்றனர்  இந்த படத்தின் மூலம்.

கதை மற்றும் திரைக்கதை ;

12-வது படிக்கும்போது ஜனனியை (ஸ்ருதிஹாசன்) பார்க்கும் ராம் (தனுஷ்) என்கிற 17 வயது பருவ பையன் அவளது சைக்கிள் செயின் மாட்டி விடுகிறான். அவ்வளவுதான் எத்தனை தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்  அதே இது! அதுதாங்க காதல் அவனுக்கு வந்து விடுகிறது. பிறகு அவளை ஸ்கூல், டியூசன் என விரட்டி போகிறான். கூடவே சைடுவாத்தியமாய் அவனது நண்பன் இருக்கிறான். விடாமல் துரத்தி, ஜனனியின் அப்பாவிடம் ராம் அறை வாங்கி ஒரு வழியாக ஜனனிக்கும் காதல் பிறக்கிறது. வழக்கம்போல் இருவீட்டாருக்கும் விஷயம் தெரிகிறது. எதிர்ப்பை மீறி திருமணம் செய்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத திருப்பமாய் ராமிற்கு BIPOLAR DISORDER எனும் மன நோய்வருகிறது. அதற்கான சிகிச்சையை மனைவிக்கு தெரியாமல் நண்பணின் உதவியுடன் எடுத்துக்கொள்கிறார். இறுதியில் நோயின் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் நெருக்கமும் உருக்கமும் நிறைந்த காதல் கதையாக சொல்லப்படுகிற 3 படத்தின் கதை.

என்னைப் பொருத்தவரை மூன்று படத்தின் கதை ஒரு மொக்க பிளேடு;

தெய்வீகக் காதல், தெவிட்டாத காதல் காதலியின் மனம் கோணக்கூடாது என்ற எண்ணத்தில் மரணத்தின் எல்லை வரும் செல்லும் ஹீரோ இதெல்லாம் 1980-களிலேயே எனக்கு முந்தைய தலைமுறை பார்த்து ரசித்தாச்சுப்பா. ஆரண்யகாண்டம், Dev D மாதிரியான மரபை தகர்த்து வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களைக் கண்டு ரசிகர்கள் ஓரளவிற்காவது முழித்துள்ள நேரத்தில் இதெல்லாம் ஒரு கதைன்னு படம் எடுக்கறீங்களே? சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு. கொலவெறிப்பாட்டுல தமிழ் திரைப்பட பாடல்களின் மரபுகளை கொஞ்சம் உடைத்தமாதிரி கதையில் கொஞ்சம் உடைத்திருந்தால் வாழ்த்தியிருப்பேன். கதை திரைக்கதையில் ஓட்டைகள் இவ்வளவு இருத்தால் மற்ற விஷயங்களால் என்ன செய்ய முடியும்.



வழக்கமான தமிழ் சினிமாவின் அனைத்து ‘கிளிசே’க்களையும் இந்தப்படத்தில் பார்க்கலாம். ஹீரோவுக்கு காதல் வந்தவுடன் அவருடன் வரும் நண்பரின் கேரக்டராக வரும் சிவகார்த்திகேயனும் அப்படியே. ஆனால் அவரது வசனத்திற்கும் நடிப்பிற்கும் தியேட்டரில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. சந்தானத்திற்கு பதில் சிவகார்த்திகேயன் என்பதையாவது குறைந்தபட்சம் யோசித்திருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் கேரக்டரும் ஆண்தானே ஸ்ருதி மாதிரியான பெண்மீதான பெண்மீது தனுஷ்க்கு மட்டும்தான் காதல் வருகிறது. ஏன்? ஹூரோவின் நண்பனுக்கு எதுவுமே வரமாட்டேங்கிறது?

மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் அப்பாவாக பிரபுவின் கேரக்டரும் அரதப்பழசு. படத்தில் எதாவது புதுசா வருமா என்று பார்த்தால் கடைசி வரை மிஸ்ஸிங்.

இந்தப்படத்தில் மூன்று விஷயங்கள் மட்டுமே மரபே மீறி எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று நாயகனின் குடும்பத்தை பணக்காரர்களாகவும்,  நாயகியின் குடும்பத்தை நடுத்தர வசதிப் படைத்த குடும்பமாகவும் காட்டி இருப்பது. வழக்கமான தமிழ் சினிமாவில் பணக்கார நாயகியை குடிசையில் இருக்கும் நாயகன்தான் விரட்டி விரட்டி காதலிப்பார்.

இரண்டு – PUB-ல் வைத்து தாலி கட்டுவது. திருமணம்கிறது ஆயிரங்காலத்து பயிர் என்ற வழக்கமான தத்து பித்து இல்லாமல் பப்-பில் வைத்து தாலி கட்டுவது அருமையான காட்சி. ஆனால் அதற்கு முன்பான காட்சிகளோ, கேரக்டரைசேசனோ இப்படி ஒருக்காட்சிக்கு அடித்தளம் இடவில்லை என்பது திரைக்கதையின் தவறு.



மூன்று ; சில சமயங்களில் ஸ்ருதியின் பாத்திரப்படைப்பு பெண்களில் பார்வையில் சில விஷயங்களைச் சொல்கிறது. ஆர்வமாக வந்து தனுசின் மடியில் அமர்வதாக இருக்கட்டும். பார்க்கும்போதெல்லாம் முத்தமிடுவதாக இருக்கட்டும் நாயகியின் பாத்திரப்படைப்பில் அவ்வப்போது பரவாயில்லை.

மற்றபடி வழக்கமான கதை வெறுப்பேத்துகிறது. தனுஷ் சாகும்போது நமது கணிகளில் கண்ணீர் வரவில்லை. அப்பாடி ஒரு வழியா செத்தானே என்று என்ன வைக்கும் திரைக்கதையை நினைத்தால் வெறுப்புதான் ஏற்படுகிறது.



 இசை மற்றும் பின்னணி இசை;

 படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் அனிருத் என்பது எனது கணிப்பு. பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன அல்லது எனக்கு பிடித்திருந்தன. பிண்ணனி இசையும் படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப இருந்தது. ஆனால் காட்சிகள் மொக்கையாக இருக்கும்போது இசையை மட்டும் வைத்து என்ன செய்ய?
வசனம் ;

 வசனத்தில் சென்னை பசங்களின் வாழ்க்கையை எங்காவது இருக்கிறதா என்றால் மனதிற்கு எதுவும் ஞாபகம் இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு வெங்காயம் படமப் பார்த்தேன் அந்தப்படத்தின் மொழிவளமிக்க  வசனங்கள் பல இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கின்றன. மொக்க, பாங்கம் போன்ற சில வார்த்தைகளை வசனத்தில் சேர்த்தால் அது சென்னைப்படமாகி விடாது.

எடிட்டிங்;

எந்த ஒரு அடிப்படையும் இல்லாத கதையமைப்பைக் கொண்டு காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தால் எடிட்டர் என்ன செய்ய முடியும். பாத்திரப்படைப்புகளுக்கான காட்சிகளோ, படத்தின் முக்கிய திருப்பமான நாயகனின் தற்கொலைக்கான காரண காரிய காட்சிகளோ இல்லாதபோது எடிட்டர் வெறும் வெட்டி ஒட்டும் பணியை மட்டுமே செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு;

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய அருமையான படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர். தனுஷ் ஸ்ருதியை விரட்டும் காட்சிகளில் ஒளிப்பதிவு பரவாயில்லை. ஆனால் என்ன செய்வது இயக்குநரை மீறி என்ன செய்வார் பாவம்.
நடிப்பு;

தனுஷ்;

சொல்லத் தேவையில்லை. ஸ்கூல் பையனாகவும், ஸ்ருதியை விரட்டும்போதும், பின்னாடி மனப்பிரச்சினையால் தவிக்கும்போதும் நடிப்பை மிகையின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதியில் மனநோயாளியாக நடிக்கும்போது மயக்கம் என்ன பார்க்கிறோமா என்ற சந்தேகமே வந்து விட்டது. ஆனால் இயக்குநர் கொடுத்த பாத்திரத்தை என்றுமே கச்சிதமாக நடிக்கும் தனுஷ் அருமை.

சிவகார்த்திகேயன் ;வழக்கமான கதையை முன்பாதியில் காப்பாற்றுவது சிவகார்த்திகேயன்தான். எக்ஸ்பிரசன்ஸ் மற்றும்  புலம்பல்கள் காதலிப்பவர்களுடன் இருக்கும் நண்பர்களின் அவஸ்தையை ஓரளவிற்கு கொண்டு வந்தது.

ஸ்ருதிஹாசன்;

ஸகூல் பெண்ணாக, பள்ளி வயது தவிப்புடன் குறு குறு பார்வையுடன் ஸ்ருதிஹாசன்  ஸ்ருதி பிசகாமல் நடித்திருந்தார். கல்யாணமாகி நெருக்கம் காட்டும் காட்சிகளிலும் அவ்வளவு கச்சிதமான நடிப்பு. ஆனால்  தனுஷ் இறந்தபிறகு அழுது அழுது கடுப்பேத்துகிறார்.  தியேட்டரில் ரசிகர்கள் வெறுத்துபோய் அம்மா தாயே அழுதுகிட்டே இருக்காத என்று கத்தி தீர்த்தார்கள். அந்தளவுக்குஇரண்டாவது பாதியில் கடுப்பேத்தீட்டீங்க மை லார்ட்.

மற்றவர்கள்;

பிரபு, பானுப்ரியா, ரோகினி, தனுஸின் நண்பனாக வரும் போட்டோகிராபர் வெங்கட் ஆகியோருக்கு காட்சிகள் குறைவு. வெங்கட்டுக்கு இரண்டாவது பாதியில் ஏராளமான காட்சிகள் இருந்தாலும் சோகமாகவே முகத்தை வைத்துக்கொண்டிருக்க வேண்டி இருப்பதால் பெரிதாக சோபிக்கவில்லை.

 கலை ;
கலைக்கு பாடல்களில் மட்டும்தான் அதிகவேலை. வேறெங்கும் வேலை இருந்ததாக தெரியவில்லை.

 ஆகையால் நான் சொல்வதெல்லாம் மூன்று படம் நானும் டைரக்டர்தான் பார்த்துக்கோ எனபதற்கான படைப்பு. ஆனால் நமக்கானதல்ல. அல்லது எனக்கானதல்ல.

  

2 comments:

நடப்பதற்கு மட்டும் said...

arumai anna... george geo

Anonymous said...

too critical sir, i hve not watched the movie but y should we expect a different yet good film from a director who has no reputation raher than daughter of rajni.