வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Thursday, September 2, 2010

காமன்வெல்த் போட்டிகளை நாம் புறக்கணிக்க வேண்டும்! - சேத்தன் பகத்



டந்த ஆகஸ்ட் 29-ம் தேதி Times of india  சென்னைப் பதிப்பில் பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத் (Chetan Bhagat) காமன்வெல்த் போட்டிகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் கட்டுரை வெளியாகி உள்ளது. தமிழ் வாசகர்களுக்கும் தேவையான கருத்துகள் அதில் இருந்ததால், அந்த ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பை அளிக்கிறேன். ஆங்கிலக் கட்டுரையின் பொருள் மாறாமல் தமிழுக்கென சில உவமைகளை மட்டும் சேர்த்திருக்கிறேன்.



2010- ம் வருடத்தின் மிகப்பெரிய  கொள்ளையைக் கொண்டாடாதீர்கள்!

       காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடிப் போயுள்ளது என்பதை நான் விளக்கிக் கூறத் தேவையில்லை. ஏற்கனேவே தேவையான அளவு துவைத்துக் காயப்போட்டு விட்டனர். சுதந்திர இந்தியாவில் நடந்த மிகக் கேவலமான ஊழலாக இந்த காமன்வெல்த் போட்டி ஊழலைக் கூறலாம். மக்களின் பணத்தை திருடியது மட்டுமல்லாமல், எந்த வேலையையும் முழுமையாக முடிக்காமல் இருக்கிறார்கள். டெல்லி நகரம் முழுவதும் அங்கங்கே பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். இதனால்தான் காமன்வெல்த் போட்டியின் மையநோக்கும பாடலும், ரிங் டோனும் முடிவில்லாத டிரில்லிங் கருவி எழுப்பும் எரிச்சலூட்டும் ஒலியாகவே மக்களுக்கு கேட்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிவடைகிறதோ இல்லையோ, போட்டிகள் முடிவடைந்தவுடன் மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்! தோண்டப்பட்ட சாலைகளும், மூடப்படாத சாக்கடைக் குழிகளும்தான் நடந்து முடிந்த மிகப்பெரிய  பகல் கொள்ளையை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கப்போகின்றன.

    விளக்கம் அளிப்பதில் இந்த அரசுக்கு முனைவர் பட்டமே வழங்கலாம். விசாரணை அறிக்கைகள், பொறுப்பற்ற கருத்துகள், தவறுக்கு பொறுப்பேற்காமல் ஒருவர் மற்றொருவரைக் கைக்காட்டி நகர்வது என போட்டிகள் முடியும்வரை இதே காட்சிகள்தான் அரங்கேறும். அதன்பிறகு மக்களும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை மறந்து விடுவார்கள். நிறைவு விழாவில் திரைப்பட நடிகர்கள் கலந்து கொண்டு நடனமாடுவார்கள். நடத்தப்பட்ட கொள்ளைக்கு பரிகாரமாக மக்ளுக்கு அளிக்கப்படும் கலை விருந்தாக அது அமையும். 

     இதற்கிடையில் இந்தியாவின் மதிப்பை காப்பாற்றுவோம் என்ற  ரீதியில் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு போட்டிகளுக்கு ஆதரவு திரட்டப்படும். இந்தியாவின் கவுரவம் ஊசலாட்டத்தில் இருப்பதால், மக்கள் அனைவரும் போட்டிக்கு ஆதவு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்திய இளைஞர்கள் மைதானங்களை நிரப்பி, போட்டியை உற்சாகப்படுத்தவும் வேண்டப்படுவார்கள்.  ஆனால் இந்த போட்டிகளை நாம் ஆதரித்தால், அது நாம் வாழ்நாளில் செய்கிற மிகப்பெரிய  தவறாகவே அமையும். ஊழல் நிறைந்த அக்கறையற்ற இந்த அரசை அவமானப்படுத்த இதுவே பொன்னான வாய்ப்பு. இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வழிப்பறி செய்யபட்டுள்ளதால் எதிர்ப்பை பதிவு செய்ய இதுவே சரியான தருணம். அரசும் தங்களது பிம்பத்தை காப்பாற்ற பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே அவர்களை வசமாக பிடித்து மடக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

            அவர்களை தண்டிக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறை என்பது, நமது தேசப்பிதா காந்தியடிகள் அவர் காலத்தில் கடைப்பிடித்த வழிமுறைதான் - அதுதான் ஒத்துழையாமை. ஆம்! போட்டிகள் நடக்கும் இடத்திற்கு போகாதீர்கள்... தொலைக்காட்சியிலும் அதைப் பார்க்காதீர்கள்... இதைத்தான் நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன். ஏமாற்றும் ஆட்டத்திற்கு நீங்கள் சியர் லீடராக இருக்க முடியாது. போதுமான அளவிற்கு இந்திய மக்களை தலையில் மிளகாய் அரைத்துவிட்டு, கொஞ்சம் புன்னகையையும் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான். அவர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்ய முடியும் என்றால், நம்மால் மைதானங்களிலிருந்து வெளியேற முடியும்.

     நமது நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்ற போட்டிகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாதா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம். கவுரவம் என்றவுடன் எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. நான் சிறுவனாக இருந்தபோது எனது பக்கத்து வீட்டில் கொடுமைக்கார கணவனும், அடிவாங்கி களைத்த மனைவியும் வசித்து வந்தார்கள். அந்தப்பெண் அடியினால் கிடைத்த காயங்களை அரிதாரம் பூசியும், மனதில் ஏற்பட்ட காயங்களை உள்ளேயும் புதைத்தும் வைத்திருந்தார். நாங்கள் எப்போது அவர்களது வீட்டிற்கு சென்றாலும், சந்தோசமான தம்பதிகளாகவே காட்டிக் கொள்வார்கள். எனக்கு எல்லாமே அவருதாங்க! என்று கணவனுக்கு அவ்வப்போது பாராட்டு பத்திரமும் அந்தப் பெண்மணி வழங்குவார். அந்தப்பெண் தனது கணவனின் உண்மையான கோடூர முகத்தை மற்றவர்களுக்கு ஏன் வெளிச்சம் போட்டு காட்டவில்லை? என்று எனது அம்மாவிடம் கேட்டேன். "சந்தோசமற்ற குடும்பமாக வெளியே காட்டிக் கொள்வது அவ்வளவு உசிதமாக இருக்காது" என்று எனது அம்மா பதிலளித்தார். அடிவாங்கி களைத்தாலும் அந்தப்பெண் தனது குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தார். நாளாக நாளாக காயங்கள் உடையும் எலும்புகளாக உருமாற்றம் பெற்றன. உடையும் எலும்புகள் உயிரைப் பறிக்கும் அளவிற்கு மாறின. இறுதியில் ஒருநாள் காவல்துறை கணவனையும், ஆம்புலன்ஸ் அந்த அப்பாவி பெண்ணையும் அள்ளிப்போட்டுக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

      ஆம்! இதுதான் இந்தியக் கலாச்சாரம். கவுரவம் என்பதை தவறாக புரிந்து கொண்டு, அவலங்களை மறைத்து எல்லாம் சரியாக இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கவே நாம் என்றும் முயல்கிறோம். காமன்வெல்த் போட்டிகளைப் பொறுத்தவரை, அதன் ஒருங்கிணைப்பாளர்களை கொடூரக்கார கணவன்களாகவும், இந்திய மக்களை அடிவாங்கி களைத்த மனைவியாகவும் கொள்ளலாம். ஆனால் நவீன இந்தியாவில் மனைவிகள் முன்பைப்போல எல்லா வலிகளையும் சகித்து கொண்டு அமைதியாக இருப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

      கல்லூரி கூட்டமைப்புகள், பள்ளிகள் மற்றும் தனிநபர்கள், 'நாங்கள் போட்டிகளை ஆதரிக்க மாட்டோம்' என்ற தெளிவான நிலையை எடுக்க வேண்டும். காந்திஜி கூறியதைப்போல, ஆட்சியாளர்க்ள் நமக்கு அழுத்தம் கொடுக்க முடியுமே தவிர, நம்மை ஒத்துழைக்க வைக்க முடியாது. இந்தப்போட்டிக்கு விளம்பரத் தூதுவர்களாக, தங்களது பெயர்களை அளிக்கும் பிரபலங்கள், ஊழலை மறைக்க தாங்கள் உதவ வேண்டுமா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை சிந்திப்பது நல்லது. இது இந்திய மக்களின் தவறல்ல, ஏழைகளின் கோவணத்தைக் கூட யோசிக்காமல் கொள்ளையடித்துவிட்டு  இப்போது அவமானப்பட்டிருக்கும் ஒரு கொள்ளைக்கூட்டத்தின் தவறு என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் படம்பிடித்து காட்ட வேண்டும். இந்தியாவால் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க முடியாமல் போவதற்கு காரணம், திறமையான வீரர்கள் இல்லாமல் போவது அல்ல... இந்தியா தங்கப்பதக்கங்கள் வெல்வதைவிடன தங்களது சட்டைப்பாக்கெட் தங்கங்களால் நிரம்புவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் விளையாட்டு அமைப்புகளின் பொறுப்பில் இருக்கும் நபர்கள்தான் காரணம் என்பதையும் சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இந்த அரசு முழுமையான மெஜாரிட்டியுடன், ஸ்திரத் தன்மையுடன் ஒரு வருடத்திற்கு முன்பு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இவர்கள் நினைத்திருந்தால் முன்னுதாரணமாக நேர்மையாக ஆட்சி செய்திருக்க முடியும். அதற்குப் பதிலாக விண்ணை எட்டும் விலைவாசியையும், புரையோடிப்போயிருக்கும் ஊழலையுமே இந்திய மக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர். அரசியல்வாதிகளே! நீங்கள் எங்களது இளைஞர்களுக்கு வாழும் உதாரணமாக (!?) இருக்கிறீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு ஆளுங்கட்சியின் தவறுகளை அறுவடை செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. முதலில் அவர்கள் தங்களுக்குள் ஒத்துப்போக வேண்டும். மதத்தையும் அரசியலையும் கலக்காமல், நேர்மையான கடின உழைப்பு கொண்ட தலைவர்களை அறிமுக்ப்படுத்த வேண்டும். அப்போதுதான் நல்லது நடக்க வாய்ப்புள்ளது.

இந்த அவமானங்களில் இருந்து வெளிவர ஆளும் கட்சிக்கு ஒரே வழிதான் இருக்கிறது. போட்டிகளை சிறப்பாக நடத்துவது என்பதல்ல அது... அதைப்பற்றி இனி யாரும் சட்டை செய்யப் போவதில்லை. இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், எவ்வளவு பெரிய  சக்தி படைத்தவர்களாக இருந்தாலும் தயவுதாட்சன்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும் அதுதான் ஒரே வழி. ஊழலை ஒழிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்லியில் தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்கள் சம்பந்தப்பட்டவர்களின் அரசியலுக்கான சவக்குழியாக மாறிவிடும். இந்திய மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில் வல்லவர்கள், ஆனால் அவர்கள் வருத்தத்தின் உச்சத்திற்கு போனால் அதற்கு காரணமானவர்களை வருத்தமுற வைப்பதிலும் வல்லவர்கள். விரைவில் தவறுகளுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள் இல்லையென்றால், மக்கள் உங்களைப் பார்த்து சொல்வார்கள்- உங்கள் ஆட்டம் முடிந்தது.

பின் குறிப்பு ;  இந்தக் கட்டுரையின் மூல வடி வமான ஆங்கிலத்தில் படிக்க அருகில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கவும். http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/all-that-matters/Please-dont-cheer-the-2010-loot-fest/articleshow/6453682.cms

No comments: