வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Wednesday, August 25, 2010

பிரெஞ்சு திரைப்படங்கள் வரிசை - Gadjo dilo - படத்தின் விமர்சனம்!

Gadjo dilo என்றொரு பிரெஞ்சு படம் எனக்கு பிடித்த படங்களின் முதல் வரிசையில் இருக்கிறது. படத்தின் தலைப்புக்கு ரோமானிய மொழியில் ஜிப்சி அல்லாதவன் என்று அர்த்தமாம். படத்தின் கதை கேட்பதற்கு சாதாரணமானது.நோரா லூகா என்னும்

நாட்டுப்புற பாடகியைத் (ஜிப்சி பாடகி) தேடி ரோமானிய நாட்டிக்குள் நுழையும் பிரெஞ்சு இளைஞனுக்கு ஏற்படும் அனுபவங்களே கதை.

சுற்றியும் பனிபடர்ந்த அத்துவான நிலப்பகுதியில் நிற்கும் ஸ்டெபான் என்னும் இளைஞனிலிருந்து தொடங்குகிறது படம். செத்துப்போன அப்பா விரும்பிக் கேட்ட பாடலுக்கு சொந்தமான நோரா லூகா என்ற பாடகியைத் தேடி ரோமானியாவுக்குள் நுழைகிறான் இளைஞன். இரவில் அவனது வழியில் குறுக்கிடுகிறார் இசிடார் என்னும் கிழவர். போதையின் உச்சத்தில் இருக்கும் அவரிடம் நோரா லூகா பற்றிக் கேட்க அவர், தனக்குத் தெரியுமென 'உதார்' விடுகிறார்.  இருவரின் சந்திப்பில் இருந்தே நமது விலா எலும்புகள் நோக ஆரம்பித்து விடுகின்றன. அவர் ஒன்று கேட்க இவரும், அவர் சொல்லும் பதிலுக்கு ஸ்டெபானின் பதில்களும் சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைப்பவை. ஊருக்கு ஒதுக்குப் புறம் நாடோடிகளாக வசிக்கும் ஜிப்சி இன மக்களின் ஒரு குழுவிற்கு தலைவராக இருக்கும் இசிடார், ஸ்டெபானை அன்றிரவு தனது வீட்டில் அடைக்கலம் அளித்து தூங்க வைக்கிறார்.

அடுத்தநாள் காலையில் போதைத் தெளிந்து எழுந்து ஸ்டெபானைத் திருடன் என நினைத்து தாக்கப்போகும் காட்சி இருக்கிறதே விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். உண்மை உணர்ந்து கிழவர் சமாதானம் ஆனாலும், யாரடா இந்த நாகரீக நல்லவன்? என நினைக்கும் அந்தக்குழு மக்கள் ஸ்டெபானை ஒதுக்குகிறார்கள். நாகரீக ஆசையில் நகரத்திற்கு சென்ற கணவன் மீதான வெறுப்பில் இருக்கும் சபீனா என்னும் அந்தக் குழு பெண், ஸ்டெபானுக்கான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வந்து சேர்கிறார். அந்த ஊரில் வசிப்பவர்கள் விழாக்களில் பாட்டுப்பாடி வயிற்றைக் கழுவுகிறார்கள். அவர்களுடன் சென்று நோரா லூகாவைத் தேடியபடி ஜிப்சி இசையைப் பதிவு செய்கிறான் ஸ்டெபான். அந்த இசையைக் கேட்க இங்கே சொடுக்கவும்....




ஸ்டேபானுக்கும், சபீனாக்கும் காதல் பூத்து காமத்தில் முடிகிற காட்சிகள் போலியற்ற இயல்பான வாழ்க்கைப் பதிவுகள். ஜெயிலுக்குப்போன இசிடாரின் மகன் திரும்பி வந்து மீண்டும் ஊர்க்காரர்களுடன் மோத, ஜிப்சி இன மக்களின் வாழ்விடம் கொளுத்தப்படுகிறது. இசிடாரின் மகனும் இதில் மரிக்க, வெறுப்பின் உச்சத்தில் பாடல்களை பதிவு செய்த கேசட்டுகளை உடைத்து விட்டு திரும்புகிறான் ஸ்டெபான். இதுதான் படத்தின் கதை...


படத்தின் கதையைக் கேட்டார் இதிலென்ன பெரிய பிரமாதம்  என்று நினைக்கத் தோன்றும். ஆனால் படத்தில் நமது இலக்கணங்களை மீறி காட்சிகள் நிறைய உண்டு.

நாகரிக சமூகம் இந்த உலகில் ஜிப்சி போன்ற நாடோடி மக்களை எப்படி நடத்துகிறது என்பதுதான் படத்தின் அடிப்படை நாதம்.  பேன்ட், சர்ட் போட்டிருக்கும்  கோமாளிகள் என்றுமே வாழ்க்கையை போலித்தனங்கள் இல்லாது உண்மையான நாகரிகத்துடன் வாழ்கிற நரிக்குறவர்கள் போன்றவர்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சிதான் படத்தின் அடிப்படை. இந்தப்ப்டத்தை இயக்கிய Tony Gatlif  என்பவர் இசையமைப்பாளரும் கூட. மனதை உருக்கும் ஜிப்சி இசை படத்தின் பயணத்தை நம்மை அறிய விடாது. படம் பார்த்து முடித்தவுடன் யார்  உண்மையான  மனிதர்கள்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும்.

சில காட்சிகள் பிரெஞ்சு இயக்குனர்களின் தைரியத்தைப் பறைசாற்றுபவை. ஒரு காட்சியில் போதையின் உச்சத்தில் இசிடார் சபீனாவை தனியாகக் கூட்டிச் சென்று, கலவிக் கொள்ள கெஞ்சுகிறார். சபீனா மறுத்து விடுகிறாள். நமது படங்களில் வயதான மனிதர்களின் காமத்தைப் பதிவு செய்ததில்லை. காமக்கொடூரனாக வில்லனாக காட்டுவார்கள் அல்லது நல்லவராக முற்றும் துறந்த முனிவராக காட்டுவார்கள். வாழ்க்கையில் கருப்புக்கும் வெள்ளைக்கும் மத்தியில் பழுப்பு என்ற ஒரு நிறம் இருப்பதை திரைப்படங்களில் பிரதிபலிப்பதில்லை. சித்திரம் பேசுதடி படத்தில் நாயகனின் நண்பராக வரும் அஜயன் பாலா குடித்து விட்டு ஒரு இடத்தில் நாயகி பாவனாவிடம் கேட்பார்... "நானும் அவனும் ஒன்னாத்தான் உன்னைப் பார்த்தோம் நான் கருப்பாக இருக்கறதாலேத்தான் அவனைப் புடிச்சுட்டே" என்று. இப்படி ஒரு காட்சியை தமிழ் சினிமாவில் பொதுவாக  பார்ப்பது அரிது. நாயகினின் நண்பனும் ஆண்தான் என்பதை மறந்து விடுவார்கள். நாயகியின் தோழிக்கும் இப்படி ஒரு காட்சி யாராவது வைத்தால் பரவாயில்லை.

பொதுவாக பிரெஞ்சுப் படங்கள் என்றுமே எனது ஆதர்சமாக இருப்பவை. ஹாலிவுட் படங்கள் அன்று முதல் இன்று வரை ஒரு பார்முலாக்குள் அடங்கி கிடக்க, பிரெஞ்சுப் படங்கள் தொட்ட விஷயங்கள் ஏராளம். அதில் ஒரு சாம்பிள் இந்தப் படம்.

No comments: