வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Sunday, September 5, 2010

அண்ணாவி வாத்தியாரும் சுவாரசிய குறிப்பேடும்!

        அண்ணாவி வாத்தியாருக்கு பல பட்டப்பெயர்கள் இருந்தது. அதில் ஒன்றுதான் சீத்தலைச்சாத்தனார் என்ற பெயர். எப்போதும் தன்னுடன் ஒரு குறிப்பேட்டை வைத்திருக்கும் அவர், சுவையான தகவல்கள் மற்றும் ஆச்சர்ய சம்பவங்களை அதில் குறித்துக் கொள்வார். அதற்கும் சீத்தலை சாத்தனாருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தால்...? சுவையான தகவல்களை குறிக்கும்போதும், ஞாபக மறதி ஏற்படும்போதும் கையில் இருக்கும் பேனாவினால் பின்னந்தலையை பதம் பார்ப்பது அவரது வழக்கம். எழுத்தாணியால் பின்னந்தலையில் குத்தி எழுதியதால் தலையில் சீல்பிடித்த சங்ககாலப் புலவர் சீத்தலைச்சாத்தனாரின் பெயரில்தான் அவர் அறியப்பட்டார். கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது போன்ற அரிய கேள்விகளுக்கு அவரது குறிப்பேட்டில் எப்போதுமே இடம் உண்டு.
   
      அவரது குறிப்பேட்டில் சில சமயமும், அவரது இதயத்தில் எப்போதுமே எனக்கு இடம் இருந்தது. கொஞ்சம் சுட்டியாகவும், கொஞ்சம் குறும்பாகவும் இருந்து, நன்றாக படிக்கும் (!?) ஆரம்பக்கல்வி சிறுவர்களை வாத்தியார்களுக்கு பிடிக்கும் என்ற பொது விதி... அப்போது எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய அப்பா அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்ததால், அண்ணாவிக்கும், அப்பாவிற்கும் ஒரு நட்பு அடிப்படையிலான உறவு இருந்தது. 'இவன் எப்ப பார்த்தாலும் விளையாட்டிலேயே குறியா இருக்கான்... காலைக் கூட கழுவாம புழுதியோட படுத்து தூங்கிடுறான்... சரியா குளிக்க மாட்டேங்கறான்... வாரத்துக்கு மூனு நாள்தான் பல் வெளக்குறான்...நாலு சாத்து சாத்துங்க' என்ற முறையிடல் அப்பாவிடம் இருந்து வழக்கமாக வரும் ஒன்று. அதற்கு அண்ணாவியின் பதில் என்ன தெரியுமா? "அடப்போயா! எல்லாம் அவனுக்கு தெரியும் சும்மா மெரட்டாத? நீ வேணும்னா எங்க வீட்டுக்கு வந்துடுரியா?" என்று என்னைக் கேட்பார்.
 இதை அவர் சொல்லும்போது நான் அவரது மடியில் அமர்ந்திருப்பேன். இப்படி இரண்டாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை என்னை அன்பாக பாவித்த ஆளுமை அவர்.
    
           அவர்தான் இப்படி என்றால் அவரது மனைவி சகுந்தலா டீச்சருக்கு என்மீது அன்பு ஏராளம். எனது வாழ்நாளில் ஒரு வருடத்தை சேமித்தவர் அவர்தான். இதை விளக்க கிளைக்கதை ஒன்றும் அவசியம். எங்களது வீட்டில் அண்ணன் தம்பிகள் நான்கு பேர். நான்தான் கடைசியாக பிறந்து வரங்களையும், சாபங்களையும் ஒன்றாக பெற்றவன். எனக்கும் எனது மூன்றாவது அண்ணணுக்கும் வயது வித்தியாசம் இரண்டு. (நான்கு  பெற்றாலும் சீரான இடைவெளியில்தான் பெற்றார்கள் எனது பெற்றோர்). அவன் கொஞ்சம் நோஞ்சான்... 6 வயதாகியும் பள்ளி செல்லும் அளவிற்கு உடல் தகுதி இல்லை என நினைத்ததால் அவனை வீட்டிலேயே அமர்த்தி விட்டார்கள். அவனுக்கு 8 வயதான போது எனக்கு வயது 5. அப்போது எனக்கு குண்டு பையா என்ற காரணப் பெயரும் இருந்தது. இதன்பொருட்டு அவனுக்கு சம்பளம் அளிக்கப்படாத பாதுகாவலானாக இருக்கவும், எனது சேட்டைகளில் இருந்து குறிப்பாக எனது அம்மா தப்பவும் என்னையும் பள்ளிக்கு அனுப்புவது என வீட்டில் முடிவாயிற்று.
    
              ஆதிதிராவிடர் நலத்துவக்கப்பள்ளி என்பது பள்ளியின் பெயர். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள கண்ணனூர் கிராமத்தில்தான் அப்பாவின் பணி நிமித்தமும், எங்களது படிப்பு நிமித்தவும் எங்களது சொந்த கிராமமான ஆதனூரில் இருந்து குடி பெயர்ந்திருந்தோம். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தனின் ஐடியாப்படி நானும் எனது அண்ணனும் இரட்டைக் குழந்தைகள் என பதிவேட்டில் குறிக்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டோம். அப்போது எனது வலது கையைக் கொண்டு தலையைச் சுற்றி இடது காதைக் கூட என்னால் தொடமுடியாத நிலையில் இருந்தேன். எனினும் கொடுத்த கடமையை சிறப்பாக செய்ய வேண்டுமே! அண்ணனுக்கு பாதுகாவலனாகவும் இருக்க வேண்டிய கட்டாயம். ஒருமுறை எனது அண்ணணை அடித்த மற்றொரு சிறுவனை பாய்ந்து அடித்து பந்தாடி துவம்சம் செய்ததும் எனது புகழ் பரவ காரணமாமாயிற்று. சரி! அது ஒருபுறம் இருக்கட்டும்.

       ஒன்றாம் வகுப்பில் சகுந்தலா டீச்சர்தான் எனக்கு ஆசிரியர். அவர் சொல்லிக்கொடுத்து சமர்த்தாக படித்தேன். முதல் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்பு போகும்போதுதான் நான் சகுந்தலா டீச்சரை நினைவு கூறும் சம்பவம் நடந்தது. தலைமை ஆசிரியாரிடம் சென்ற எனது அப்பா, "பையனுங்க ரெண்டு பேரும் ஒரே வகுப்பில படிச்சா, பின்னாடி பிரச்சினை வரும். எனவே சின்னவனை மீண்டும் ஒன்னாவதிலேயே போட்டுடுங்க" என்று கோ¡¢க்கை வைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட கோவிந்தன் என்னை மீண்டும் ஒன்றாம் வகுப்பிலேயே அமர்த்த முடிவெடுத்தார். இந்த தகவல் சகுந்தலா டீச்சாரின் காதிற்கு போக நேராக தலைமை ஆசி¡¢யா¢ன் அறைக்கு சென்றார். "கனகராஜ் அருமையாக படிக்கிறான்(!?) மீண்டும் ஒன்னவாதில் போடக் கூடாது, அவனது அண்ணனை வேண்டுமென்றால் மீண்டும் ஒன்னாவதிலேயே போடலாம். மீறி கனகராஜை ஒன்னாவதில் போட்டால், நான் எனது வேலையை ராஜினாமா செய்து விடுவேன்" என்ற மிரட்டலையும் விடுத்திருக்கிறார். அதைக்கேட்ட தலைமை ஆசி¡¢யர் வேறு வழியின்றி என்னையும் எனது அண்ணன் குமாரையும் இரண்டாம் வகுப்பில் போட்டார். இப்படி ஒருஆசிரியராக இருந்து தனது கடைமையை நிறைவேற்றி சகுந்தலா டீச்சர் அதன்பிறகு எனது ஞாபக இடுக்குகளில் இல்லை.
    
           நான்காம் வகுப்பு வரை எனக்கு பாடம் எடுத்த அண்ணாவி வாத்தியார் அடிக்கடி விநோதமான கேள்விகளுடன் வருவார். ஒருமுறை மாணவர்களை வரிசையாக அழைத்து வவ்வால் என்று கரும்பலகையில் எழுத சொன்னார். அனைவரும் வவ்வால் என்றுதான் எழுதினோம். ஒரே ஒருவன் மட்டும் வௌவால் என்று எழுத பாராட்டு தெரிவித்தார். சில சமயம் எனக்கு பிடிக்காத பெண் மாணவிகளைப் பற்றி போட்டுக் கொடுத்தால், அவர்களுக்கு அடி சராமாரியாக விழும். உட்கார்ந்திருக்கும் பெண்ணை முடியைப்பிடித்து 'கர கர'வென்று சுற்றி முதுகில் நன்றாக நான்கு அடி கொடுப்பது அண்ணாவியின் ஸ்டைல். மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பாடம் நடத்துவார். இப்படி எனது ஆரம்பக் கல்வி பருவத்தில் என்னால் மறக்க முடியாத அன்பை அழித்து, அறிவை ஊட்டியிதல் அண்ணாவி, சகுந்தலா டீச்சர் ஆகிய இருவாரின் பங்கு கணிசமானது.

         நான் 11-ம் வகுப்பு படிக்கும்போது என ஞாபகம். அம்மா என்னிடம் அந்த தகவலைக் கூறினார். "கனகரே! சகுந்தலா டீச்சர் மூளைக்காய்ச்சல் வந்து செத்துட்டாங்க! சாவுக்கு கூட போக முடியலடா! நேத்தே எரிச்சிட்டாஙகளாம்?" என்று கூறினார். அண்ணாவி இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களது சொந்த கிராமமான ஆதனூரில் உள்ள பள்ளிக்கு மாற்றலாகி சென்றிருந்தார். இடையில் ஒருமுறை அண்ணாவி சாரைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. "இந்த வருடம் ரிட்டையர்டு ஆவப்போறேன்... வேலையை 60 வயசு வரை நீட்டிச்சு கலைஞர் ஒரு உத்தரவு போட்டா பரவாயில்லை என பெருமூச்சரிந்தபடி ஆசையை வெளியிட்டார். ( 2009-ம் ஆண்டு அது. (அப்போது கலைஞர்தான் முதலைமைச்சர்).
    
         வாழ்க்கை சக்கரம் சக ஆத்மாக்களைப் பற்றிய சிந்தனையின்றி சுழன்றது. 1999-ம் ஆண்டு சென்னைக்கு படிக்க வந்த நான் சென்னைவாசியாகவே மாறிவிட்டேன். அவ்வப்போது ஊருக்கு சென்று திரும்புவதோடு சரி. 3 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை மினிபஸ்ஸில் ஊர்திரும்பியபோதுதான் அண்ணாவி ஒரு ஊரில் சம்பந்தமில்லாது, நடந்து சென்று கொண்டிருந்தார். பிறகு விசாரித்தபோது மனைவியின் மரணத்திற்கு பிறகு, மகனும் சென்னையில் திருமணமாகி தங்கிவிட சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், முதுமையில் தனிமை நோய்த்தாக்கி தவிக்கிறார் என அறிந்தேன்.
       
       மூன்று மாதங்களுக்கு முன்பு நானும் எனது அண்ணனும் அண்ணாவி வாத்தியாரைத் தேடி அவரது சொந்த ஊரான திருத்தலையூருக்கு சென்றோம். பல்வேறு விசாரிப்புகளுக்கு பிறகு வீட்டைக் கண்டறிந்தோம். முதுமையின் துன்பம் அண்ணாவியின் முக்தில் தெரிந்தது. எங்களை யாரென்று அவருக்கு ஞாபகம் இல்லை. எங்களது அப்பாவின் பெயரை சொன்னதும் புரிந்து கொண்டு, "அய்யோ! நீங்களா? என கட்டிக் கொண்டார். வயசாயிடுச்சு ஒன்றும் ஞாபகம் இல்லை மன்னிச்சுங்கப்பா! வீட்டுக்கு வந்திருக்கீங்க சாப்பாடு கொடுக்க கூட முடியலயே! என் நெலம இப்படி ஆயிடுச்சே' என பதறித் தவித்தார். தனிமையைப் போக்க அவர் குடித்திருந்ததை பேசும்போது காற்றில் பரவிய வாடையில் இருந்து உணர முடிந்தது. "உங்க டீச்சர் செத்ததிலிருந்து சோத்துக்கே கஷ்டமாயிடுச்சு" என்று கண்கலங்கினார். அவர் பல வருடங்கள் வாழ்ந்த வீடே அவருக்கு அன்னியமாகியிருந்தது. இறுதியில் அவருடன் ஒரு தேநீர் அருந்தி விட்டு திரும்பினோம்.

           இளம்வயதில் எனது திறமையை அறிந்து உற்சாகமூட்டிய அண்ணாவியைப்போன்ற அற்புதமான ஆசிரியர்கள் தற்போது இருப்பார்களா? என்று தெரியவில்லை. இன்று ஆசிரியர் தினம், ஆனால் அவர் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை... வாழ்ந்து கழித்த வீட்டில் தனிமையில் போதையில் மூலையில் படுத்தபடி வாழ்வை நொந்தபடி இருக்கலாம். உன்னதங்கள் பல இப்படித்தான் ஆரவாரமின்றி மறைந்து போகின்றன. அடுத்தமுறை அவரைப் பார்க்கும்போது, சுவாரசிய தகவல்கள் அடங்கிய அவரது குறிப்பேட்டை என்ன செய்தார் என்று கேட்க வேண்டும்.

2 comments:

Anonymous said...

anna really very touching,,,, please find his son and make ur teacher comfort

Anonymous said...

அருமையான ஆசிரியர் பற்றிய அழகான குறிப்பு..உங்கள் வாழ்க்கைப் போலவே என் வாழ்விலும் எனது ஓர் வருடத்தை சேமித்து தந்த ஆசிரியர் இருக்கிறார்..அவர் பெயர் அருள் புனிதன்..இரண்டாம் வகுப்பு வரை ஓர் பள்ளியில் படித்து , விடுபட்டு இன்னோர் பட்டியில் சேர முயற்சித்தபோது..எனக்கும் தலை சுற்றி காது தொடும் போட்டி வைக்கப்பட்டது..என் கை கொஞ்சம் நீண்டிருக்கவே ..எளிதாக தொட்டு விட்டேன்..மூன்றாம் வகுப்பு படிக்காமலே என்னை நேரடியாக நான்காம் வருப்பில் சேர்த்தவர்....இந்த சமயத்தில் நானும் அந்த ஆசிரியருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.அவரை நினைவுக்கூற வாய்ப்பளித்தமைக்கு நன்றி..