வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Saturday, August 21, 2010

நான் மகான் அல்ல - கொஞ்சம் சிரிப்பு... கொஞ்சம் வெறுப்பு!




கார்த்திக்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங் இருக்குமென எனக்கு தெரியாமல் போய்விட்டது. சங்கம், அபிராமி, தேவி பேரடைஸ் போன்ற பல திரையரங்குகளும் ஹவுஸ்புல் போர்டு மாட்ட, இறுதியில் ஆல்பர்ட் தியேட்டரில் கடைசியாக இருந்த 3 டிக்கெட்டில் ஒன்று கிடைத்தது. நான் கார்த்தியின் ரசிகன் இல்லை என்றாலும், வெண்ணிலா கபடிக்குழுவின் இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படம் என்பதற்காகத்தான் பார்க்க விரும்பினேன்.
கல்லூரிமாணவர்கள் நால்வர் போதையின் பிடியில் மிதப்பதும், sexual starvation காரணமாக, கடற்கரையில் தனியாக உல்லாசம் அனுபவிக்கும் ஜோடிகளை அடித்து உதைத்து காதலியைத் தூக்கி கற்பழிக்கும் காட்சியுடன் படம் தண்டுவடத்தை ஜில்லிட வைத்தபடி தொடங்குகிறது.

அதன்பிறகு கார்த்தியின் அறிமுகம், பாடல், காதல் என படம் தொடக்கத்தில் கொஞ்சம் கொட்டாவி... இந்த படத்திலும் சமீப காலமாக தமிழ் சினிமாவில் அக்மார்க் நல்லவராக, பண்பாளனாக, அன்பாளராக வரும் அப்பா பாத்திரம் இருக்கிறது. மகன் வேலைக்கு போகாமல் இருப்பதைப் பற்றி கவலைப்படாத குடும்பமாம்... வீட்டில் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்களாம்... முடியல. காதல் நிறைவேற ஆறுமாதத்திற்குள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் லோன் கலெக்ஷன் ஏஜென்ட்டாக, அக்கம் பக்கம், உற்றார் உறவினர் என பார்த்துக்கோ நானும் வேலைக்குப் போறேன் என செல்லும் கார்த்தி, டெர்ரர் முகத்தை காட்டி கடனை வசூலிக்காமல், பஞ்சு மனதுடன் கடன்காரன் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு லாலிபப் வாங்கி கொடுத்து திரும்பும்போது தியேட்டரில் சிரிப்பலை. இந்த காட்சியில் ஒரு subtext இருந்தது எனக்கு பு¡¢ந்தது எத்தனை பேருக்கு புரிந்தது என தெரியவில்லை. மகளின் மனதில் இருந்து கார்த்தியை மிரட்டி விரட்ட, காஜல் அகர்வாலின் அப்பா (பிரபல வழக்கறிஞர்) ரவுடி குட்டி நடேசனிடம் அறிமுகம் செய்கிறார். நாம் பலத்த எதிர்பார்ப்புடன் சீட்டில் நுனியில் அமர்ந்தபடி அடுத்த காட்சிக்காக காத்திருக்க, கார்த்தி குட்டி நடேசனின் பழைய வீர தீர கதைகளை சொல்லி மனதில் இடம் பிடிப்பது மிகையற்ற காமெடித் திருப்பம். இங்கும் ஒரு subtext இருந்தது.



இறுதியில் நம்மை அறியாமலேயே நமக்கு எதிரிகள் உருவாகும் காலம் இது. மனப்பிறழ்வுகளும் கொடூர எண்ணங்களும் படைத்த மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்பதை வில்லன்கள் வடிவில் காட்டி இருப்பது அதிர்ச்சி. தற்போது கல்லூரி  மாணவர்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுவது அன்றாட செய்திகள் ஆகிவிட்டதால், வில்லன்கள் பற்றிய காட்சிகளில் மிகை இருந்தாலும் அதிலிருந்த உண்மை முகத்தில் அடித்தது. நன்பணுக்கு திருமணம் செய்ய காதலியைத் தூக்கி வந்து, காம வெறியில் இருவரையும் கொலைசெய்து, துண்டு துண்டாக வெட்டி வீசுகிறார்கள். கடத்தி வர பயன்படுத்திய கால் டாக்ஸி டிரைவரான கார்த்தியின் அப்பாவின் மூலம் உண்மை தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் அவரைக் கொல்ல முயற்சித்து, அயிட்டங்காரன் ஒருவனின் மூலம் திட்டமிட்டு கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். பிறகு கொலையாளிகளை கண்டறிந்து கார்த்தி துவம்சம் செய்கிறார். இவையெல்லாம் வழக்கமான தமிழ்பட காட்சிகள். கிளைமாக்ஸ் லாஜிக் இன்றி இருந்தாலும் அதிரடியான சண்டைக்காட்சியுடன் முடிகிறது. கொலையாளிகளைப் புதைத்து விட்டு திரும்பும், கார்த்தி சொல்லாது போன வசனம்தான் படத்தின் தலைப்பு - நான் மகான் அல்ல.

வில்லன்களாக சைக்கோ பாத்திரத்தில் வரும் இருவர் மிரட்டுகின்றனர். பம்பைத்தலையுடன் வரும் ஒருவரது நடிப்பு அப்பப்பா! அவ்வளவு யதார்த்தம். கார்த்தி வழக்கம்போல் நடித்திருக்கிறார். கார்த்தியின் நண்பர்களும், காஜல் அகர்வாலும் அப்படியே பொருந்திப் போகிறார்கள். மற்ற சிறு சிறு பாத்திரங்களும் சரியான தேர்வு.

இந்தப்படத்தின் ஹீரோ என்றால் அது இயக்குநர்தான். படத்தின் திரைக்கதைதான் படத்தின் பலம். படம் முழுதும் வரும் முரண்நகை  பார்த்து சலித்த காட்சிகளையும் கூட ரசிக்க வைக்கிறது. அடுத்து படத்தில் வரும் வசனங்கள், ஒரு காட்சியில் கார்த்தியின் அப்பாவிடம் காஜல் அகர்வால் காதல் மயக்கத்தில், " என்னோட அப்பாவோட ஜூவா (கார்த்தி) என்னை நல்லா பார்த்துக்குவான்னு நம்புறேன்" என்கிறார். அதற்கு ஜீவாவின் அப்பா, "23 வருடங்கள் வாழ்ந்துட்டு சொல்லுமா நான் அப்போது ஒத்துக்கிறேன்... நானும் ஒரு பொண்ணை வளர்க்கிறேன்" என்கிறார். இப்படி பாஸ்கர் சக்தியின் எழுத்து பல இடங்களில் அறிவுஜீவித்தனம் இன்றி ஈர்க்கிறது.

பாடல், இசைப் பற்றி எனக்கு அவ்வளவு ஞானமில்லை. எனினும் கார்த்தியின் அப்பா இறந்தவுட்ன வரும் பாடல் வரிகள் கண்களை பனிக்க வைக்கின்றன. "கடவுள் இல்லை என்று தெரிந்தும்  கோயில் எதற்கு?" என்பது பாடலின் முதல் வரி . நாத்திகமும், தத்துவமும் கலந்து அடிக்க நா.முத்துகுமாருக்கா சொல்லித்தர வேண்டும். பின்னனி இசையை நான் சரியாக கவனிக்கவில்லை. இனி ஒருமுறை பார்த்துதான் சொல்ல வேண்டும். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட். ஒளிப்பதிவு மதி... காதல் காட்சிகளில் மென்மையான லைட்டிங்கில் நம்மையும் ரொமான்டிக் மூடுக்கு மாற்றுகிறார். இறுதி சண்டைக்காட்சியில் கேமராவின் கோணங்கள் சண்டையின் உக்கிரத்தை பாதுகாக்கிறது. சிதிலமடைந்த வீடுகளுக்கு மத்தியில் கிளைமாக்ஸ் சண்டை நடக்கிறது. கலை இயக்குநர்கள் அதை நிஜமான இடம்போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள். ஒருமுறை மட்டுமே பார்த்திருப்பதால் படத்தின் எடிட்டிங் பற்றியும் கருத்தில்லை.

படம் பார்த்து ஒருநாள் கழிந்தாலும்... அதில் subtext-ஆக கூறப்பட்டிருந்த சில விஷயங்கள் இன்னும் மனதைக் குடைகிறது.

No comments: