வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Wednesday, August 4, 2010

டாஸ்மாக் 'குடி'மக்களுக்கு கார்ல் மார்க்ஸ் கடிதம்...


அன்புள்ள டாஸ்மாக் தமிழ்க்'குடி' பெருமக்களுக்கு தோழர் கார்ல் மார்க்ஸ் கல்லறையில் இருந்து எழுதும் மடல்,


நான் பல வருடங்கள் வறுமையில் உழன்று, ஆழித்துயர் கொண்டு கண்டறிந்த கம்யூனிஸ கொள்கைகளை நான் பிறந்த நாடான ஜெர்மனியில் கூட மருந்துக்கும் பயன்படுத்துவதில்லை. ஏன்? அனைவரின்  கனவு தேசமாக இருந்த சோவியத் யூனியன் கூட சிதறுண்டு போய் விட்டது. ஆனால் உலகின் மறுபக்கத்தில் இருக்கும் நீங்கள் எனது கொள்கைகளை பின்பற்றி வருவதைக் அறிந்து கல்லறையில் இருந்த எனது உடல் சிலிர்த்து விட்டது. கம்யூனிஸம் என்ற வார்த்தையே டாஸ்மாக் ரசிகர்கள் உங்களில் சிலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் கம்யூனிஸம் என்ற வார்த்தை வினைச்சொல் என்பதால் அதை அறிவதை விட செயல்வடிவமாக இருப்பதுதான் முக்கியம். ஆகையால், நீங்களும் ஒரு காம்ரேடுதான் என்பதற்கான காரணங்களைக் அடுக்குகிறேன் கேளுங்கள்.

1. டாஸ்மாக் பாரில் நுழைந்தவுடன் யாரும் யாருடைய sidedish-க்கும் சொந்தம் கொண்டாடுவதில்லையாமே?. தனிச்சொத்துடைமை என்ற பிரச்சினை அங்கு இல்லை. எவர் தட்டிலும் இருக்கும் உணவுப்பதார்த்தங்களை யாரும் எடுத்து திங்கலாம் என்ற அறிவிக்கப்படாத சட்டம் இருப்பதை அறிந்து எனக்கு ஆச்சர்யம் பிடிபடவில்லை. 1990-களில் ஏற்பட்ட உலகமயமாக்களுக்குப் பிறகு மனிதர்கள் ஒருவரையொருவர் போட்டியாகக் கருதி உணவிற்கு சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் உங்களது இந்த மனப்பான்மை எனது மனதில் நம்பிக்கைக் கீற்றை ஒளிவிட வைத்துள்ளது.

2. பணக்காரன், ஏழை என அனைவரும் பாகுபாடின்றி பொதுக்கழிப்பிடத்தை விட கேவலமான நாற்றமெடுத்த பாரில்தான் நின்றபடியோ, அமர்ந்தோ மது குடிக்கிறீர்கள் (சமத்துவம்). போதை ஏறியவுடன் ஒருவரின் பிரச்சினையை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு ஆரத்தழுவிக் கொள்கிறீர்கள். சகோதரத்துவம் என்ற சொல்லுக்கு அர்த்தமே அங்கு வந்தால் பார்க்க முடிகிறது.

3. ஒரு குவாட்டர் வாங்கி அதை சமமாய் பகிர்ந்து கொள்வதில் உங்களது நேர்மை இருக்கிறதே அப்பப்பா! நினைக்கவே மெய் சிலிர்க்கிறது. ஒரு சொட்டு மது கூட யாருக்கும் கூடவோ குறையவே கூடாது என்ற எண்ணத்தில் நீங்கள் அளந்து, அளந்து ஊற்றும் அழகு இருக்கிறதே அந்த அழகைக் காண கண்கள் கோடி வேண்டும். யாரையும் ஏமாற்றாமல், அடுத்தவருக்கு உரிமையான பொருளின் மீது ஆசைப்படாமல் இருப்பதும் கம்யூனிஸம்தானே?

4. ஆண்பெண் சமம் என்பது ஏட்டளவில் இருந்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளில் அவை அனிச்சையாக கடைப்பிடக்கப்படுவதை கேள்விப்பட்டு சந்தோசம் அடைந்தேன். சில சமயம் ஆண்களைப் போல பெண்களும் குடித்துவிட்டு கடை வாசலில் சாஷ்டாங்கமாக பள்ளிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதுவும் கம்யூனிஸ தந்தையான எனக்கு மிகுந்த சந்தோசம் அளிக்கிறது.

5. அரசே அனைத்து துறைகளையும் ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் எனது கொள்கையின் அடிப்படையே! அதற்கு ஏற்ப அரசே டாஸ்மாக் கடைகளை ஏற்று நடத்துகிறது என்பது எனக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம். உங்களது ஆதரவோடு வருடத்திற்கு15 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு வருமானம் கிடைப்பது பொருளாதார ரீதியாகவும் எனது கொள்கையின் வெற்றியைக் காட்டுகிறது.

6. புரட்சிசெய்! புரட்சிசெய்! என்று எனது தத்துவங்கள் காட்டுக் கத்து கத்தினாலும் புரட்சி என்ற வார்த்தையை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கப்பட்ட தேங்காயைப்போன்று காமெடியாக அனைவரும் எடுத்து பயன்படுத்துவது எனது மனதை பல வருடங்களாக அறுத்துக்கொண்டிருக்கும் விஷயம். ஆனால் நீங்கள் எந்த ஒரு தத்துவ பின்புலமும் இல்லாமல், பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்று தெரியாமல், பூர்சுவா என்றால் யாரென்று அறியாமலே 'பார்'களில் அரசாங்கத்தை எதிர்த்து அசால்ட்டாக பேசி வருவது பரட்சிப் பட்டுபோகவில்லை என்பதை உணர்த்துகிறது. உங்களது அரசியல் வேட்கையை வளரவிட்டால் எங்கு புரட்சி வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் அனைத்து பார்களிலும், 'தயவு செய்து இங்கு அரசியல் பேசாதீர்கள்' என்று அறிவிப்பு பலகை வைக்குமளவிற்கு உங்களது வேகம் இருப்பதைக் கண்டு புரட்சி ஓங்குக என்ற குரல் எனது கல்லரையிலிழுந்து அடிக்கடி எழுந்து அடங்குகிறது.


இப்படி சோஷலிச கொள்கைகளை வாழ்க்கை முறையாக நீங்கள் கடைப்பிடித்து வருவது எனது சந்தோசம் அளித்தாலும், டாஷ்மாக்கில் இருந்து வெளியே வந்தவுடன் உங்களது புரட்சித் தாகம் பட்டு விடுவதாக அறிந்து கொஞ்சம் வருத்தம் மேலிடுகிறது. எனினும் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான் ஒருநாள் பெரும் தீயாக உருவெடுக்கும், அப்படி உங்களது டாஸ்மாக் புரட்சி பெரும் புரட்சியாக வெடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உங்களது தோழன் கார்ல் மார்க்ஸ்...

1 comment:

Anonymous said...

யோசிக்கவைக்கும்,ரசனையான எழுத்துக்கள் நண்பா..அருமை..