வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Friday, November 26, 2010

நந்தலாலா - ஏற்கனவே மிரண்டிருக்கும் பிரபல நடிகர்களை மேலும் மிரள வைக்கும்!


தமிழ்படங்களைப் பார்த்து வெறுத்துப் போய் எங்கடா film festival போடுவாங்க? போய்ப்பார்க்கலாம் என்றிருந்த என்னைப் போன்றவர்களுக்கு அட! நம்ம மொழியிலும் இப்படி ஒருப்படம் என பெருமைப்பட வைத்துள்ளது நந்தலாலா .


உலகில் உறவுகள் என்பது ரத்த சொந்தங்கள் மட்டுமல்ல... சகமனிதர்களும்தான் என்பதை ஒரு சிறுவன் உணர்வதுதான் படத்தின் ஒன்லைன். அம்மா என்ற உற வைப்பற்றிய  ஏக்கத்துடன் கண்தெரியாத பாட்டியுடன் வசிக்கும் சிறுவன் அகிலேஷ். அம்மாவிடம் இருந்து வரும் கடிதமும், பணமும் மட்டுமே அம்மாவைப்பற்றிய அவனது அறிதலாக இருக்கிறது. ஒருநாள் அம்மாவைத் தேடி பயணம் செய்கிறான். அப்போது அவன் ஏதேச்சையாக மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த மிஷ்கினைச் சந்திக்கிறான். மிஷ்கினுக்கு தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்த அம்மாவைத் தேடிப்பார்த்து நான்கு அறை கொடுக்க வேண்டும் என்பது  ஆசை. அகிலேஷுக்கு அம்மாப் பார்த்து ஒரு முத்தம் கொடுத்து திரும்ப வேண்டும் என்பது ஆசை. இருவரும் இணைந்து அம்மாக்களைத்தேடி பயணிப்பதுதான் மீதிப்படம்.
 
பயணம் என்கிற கதைக்களமே கதையில் சுவாரசியமான மனிதர்களைக் கொண்டு வந்து விடுகிறது. வாழ்க்கையில் இலக்குகளை விட இலக்கை நோக்கிய பயணம்தான் மிகவும் சுவாரசியமானது. சிறுவனிடம் திருடுபவன், ஆங்கிலம் புரியாத போலீஷ்காரர்,  ஒரு கால் சூம்பிப்போனவர்,  டிராக்டரில் வந்து உதவும் பள்ளி மாணவி, அடித்து உதைத்து பிறகு அன்பு செலுத்தும் லாரி ஓட்டுனர், வயிற்றுக்காக உடலை விற்கும் விபச்சாரி என விதவிதமான பாத்திரங்களை தாண்டி சென்று இறுதியில் தத்தமது அம்மாக்களை சந்தித்தார்களா? என்பதுதான் படத்தின் திரைக்கதையாக இருக்கிறது.
 
கதாப்பாத்திரங்களின் characterization முதல் அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் மிஷ்கின் தமிழ் சினிமாவின் மிச்சிறந்த இயக்குநர்களின் வரிசையில் காலாகாலத்திற்கும் சேர்ந்து விட்டார்.  பல நடிகர்களிடம் கதை சொல்லி யாரும் நடிக்க முன்வராததால் தானே நடித்திருக்கிறார். ஏற்கனவே கையைக் காலை ஆட்டி, பறந்து பறந்து உதைத்து, ஐந்து பக்க வசனம் பேசி, எதிர்கால முதல்வர் நாற்காலியைக் குறிவைத்திருக்கும் நடிகர்கள் தங்களின் படங்களை புறங்கையில் தள்ளி விட்டு, மைனா போன்ற படங்களை மக்கள் விரும்பி பார்ப்ப்தைக் கண்டு கிலியில் இருக்க, அவர்களின் வயிற்றில் மேலும் புளியைக் கரைத்துள்ளது இந்தப்படம்.
 
பின்னணி இசையில்லாமல் opening title card போடுவதில் இருந்து end title card வரை அனைத்துவிதமான பார்முலாக்களையும் உடைத்திருக்கிறார்கள். மிஷ்கினும், சிறுவனும் படம் முழுக்க ஒரே ஒரு உடையில்தான் வருகிறார்கள். சிலப் பாத்திரங்களுக்கு வசனமே கிடையாது. படத்தின் மொழி இருக்கிறதே! அவ்வளவு சிறப்பாக உள்ளது. காட்சி ஊடகம் என்பதால் காட்சிகளின் மூலமும், கதாபாத்திரங்களின் முகபாவனைகளின் மூலமே கதை சொல்லி இருக்கிறார்கள். படத்தின் கேமரா கவிதை எல்லாம் பாடவில்லை... காட்சிகளை காட்சிகளாகவே அளித்துள்ளது. கேமராவின் கோணங்களும், பின்னணி இசையும் மட்டுமே பல இடங்களில் கதை சொல்கின்றன. சில காட்சிகளில் பின்னணி இசையும் கிடையாது. விப்ச்சாரியாக நடித்திருக்கும் ஸ்னிக்தா, மழைநாள் இரவில் தனது சோகக்கதையை சொல்லும்போது கேமரா wide shot-ல் இருந்து கொஞ்சம் சொஞ்சமாக நகர்ந்து இறுதியில் close up-ல் நிற்கிறது. அந்தக்காட்சியில் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக உருகி விடுவோம். நிறைய காட்சிகளில் கால்கள் மட்டும்தான் இருக்கின்றன. இன்னும் சில காட்சிகளில் பாதி உருவம்தான் தெரியும்படி கேமரா கோணங்களை வைத்திருக்கிறார்கள். பல காட்சிகள் முக பாவனைகளுக்கு close up shot  என்றால் சில காட்சிகளில் உடல் இசைவுகளை காட்ட mid shot வைத்துள்ளார்கள். அதுவும் சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் பின்புறத்தில் கேமராவை வைத்து படமாக்கியிருப்பதும், அதற்கு  மக்களிடம் கிடைக்கும் கைத்தட்டலும் இயக்குநரின் முயற்சிக்கு மரியாதை சேர்க்கிறது.
 
 
சில இடங்களில் பின்னணி இசையும் இல்லாமல், வசனமும் இல்லாமல் வெறும் கேமரா மட்டுமே கதை சொல்கிறது. படத்தில் குறைவாக வரும் வசனங்கள் மிகவும் யதார்த்தம். படத்தில் பிரம்மாண்டமான செட்டுகள் இல்லை... நாம் பயணங்களின் போது கடக்கும் சாதாரண சிதிலமடைந்த வீடுகளும், கடைகளும்தான் படத்தில் வருகின்றன. அதை தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். ஸ்நிக்தா விபச்சாரியாக அறிமுகமாகும் காட்சி ஒன்றே தமிழ் சினிமாவின் வழக்கமான கட்டுப்பெட்டி சூத்திரங்களை உடைத்து காலில் போட்டு மிதிக்கிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.


நான் சொல்வதை வைத்து ஆஹா! இது ஏதோ விருதுக்கு எடுக்கப்பட்ட்ட படம் போல, நான்கைந்து கைக்குட்டைகளை கண்கள் நனைத்து விடும் என நினைத்து விடாதீர்கள். படம் முழுக்க கதையுடன் இணைந்து விலா எழும்புகளை நோகச் செய்யும் காமெடி உள்ளது.
 
ஒருகாட்சியில் இளநீர் திருடிக் கொண்டு ஓடும் மிஷ்கினையும், சிறுவனையும் அரிவாளைத் தூக்கிக்கொண்டு விரட்டுகிறார் இளநீர்க்கடைக்காரர். திருடிய இருவரும் ஓடமுடியாமல் களைத்து விழ, அரிவாளைத்தூக்கிக் கொண்டு ஓடி வந்தவரும் களைத்து கீழே விழும் காட்சியில் உம்மணாம்மூஞ்சி நரசிம்மராவாக இருந்தாலும் கூட தன்னையறியாமல் சிரித்து விடுவார். இதைப்போன்ற டைரக்டர் டச் என்று சொல்லக் கூடிய காட்சிகள் படம் முழுவதும் இருக்கின்றன.
 
படத்தொகுப்பிலும் தாம்தூம் என்பது இல்லை. ஒருகாட்சியில் இருந்து இன்னொரு காட்சி மயிலிறகு பறப்பது போல மென்மையாக நகர்கிறது. படத்தில் இரண்டு பாடல்கள்தான்.. அவை  தேவையான இடத்தில் மட்டுமே வருகின்றன. அன்பைப் போதிக்கும் முதல் பாடல்  அம்மாவின் பெருமையைப் பேசுவது இரண்டாவது பாடல். இரண்டாவது பாடல் இளையராஜாவின் குரலில் தொடங்கும்போது மனம் கனத்துப்போகிறது.
 
திரைப்படத்தின் முக்கிய  அம்சமே படம் பார்த்த அனுபவத்தை அப்படியே எழுத்தில் வடிக்க முடியாது என்பதுதான். எனவே படம் பார்த்தால் நான் எழுதியுள்ளதைப் போன்று இன்னும் ஏராளமான விஷயங்கள் உங்களுக்கும் புலப்படும்.


படத்தின் மூலக்கதை central station போன்ற பிறமொழிப் படங்களின் தழுவல்தான் என்றாலும், அதையும் மீறி தூக்கி வைத்து பாராட்டப்பட வேண்டிய படம். படத்தில் பயணத்திற்கான சரியான logic இல்லை. எங்கு செல்கிறார்கள்? எதைக்கடந்து செல்கிறார்கள் என்ற தெளிவு இல்லை. எனினும் அது  படத்தை ரசிக்க தடைப்போடவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அதிரச்சி தரும் சம்பவத்துடன் படம் முடிவதும் என்னைப் பொருத்தவரை ஒரு நெருடல்.
 
அகிரா குராசேவாவின் படங்கள் அன்பை மட்டுமே போதித்தன. அதை அவரே பலமுறை  கூறியுள்ளார்.  அதைப்போன்று இந்தப்படமும் அன்பை மட்டுமே போதிக்கிறது. இந்தப்படத்தை பார்த்து உச்சுக் கொட்டி பிறகு மறந்து விடுவதை விட... நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களை போட்டியாக கருதாமல், அன்பாக பழகுவதுதான் இந்தப்படத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

No comments: